|
வட, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் மலையக மக்கள் விடயத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டுமென டி.வி.சென்னன் தெரிவிப்பு
[திங்கட்கிழமை,
08-02-2010, 22:30 GMT]
வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமேயன்றி மலையகத் தமிழ் மக்கள் விடயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மலையக தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு மலைய தமிழ் அரசியல்வாதிகளாக நாமிருந்து வருகின்றோம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் ஆலோசகர் டி.வி.சென்னன் தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற தோட்டமட்டத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய விசேட கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் வட, கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். இவ்விடயத்தில் இ.தொ.கா எவ்வகையிலும் கசப்புணர்களை மேற்கொள்ளவில்லை. அதனை நாம் ஆட்சேபிக்கவுமில்லை. மலையக தமிழ் மக்களைவிட வட, கிழக்கு மாகாண தமிழ்மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதுடன் சொல்லொணாத் துயரங்களையும் அனுபவித்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக வடபகுதி தமிழ்மக்களின் அவல நிலையினை கண்டு மலையக அரசியல்வாதி என்றமுறையில் பெரும் வேதனையடைந்து வருகிறோம். ஆனால் அப்பிரச்சினை தீர்;விற்கு எம்மால் எதனையும் செய்யமுடியாத நிலையிலிருக்கிறோம். நிலைமை இவ்வகையிலிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியிருப்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. மலையக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க முயல்வதைவிட வடக்கு, கிழக்குப் பகுதிகளின் தமிழ்மக்கள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கடப்பாடாக இருக்கவேண்டும். வட, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மலையகத் தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறை காட்டுவதென்பது வேடிக்கையாகவுள்ளது. மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மலையகம் சாராத எவரும் அவசியமில்லை. அதற்கென மலையகத்தில் தொழிற்சங்கங்கள் பலவும், அரசியல் கட்சிகள் பலவும் இருந்து வருகின்றன. அவ் அரசியல், தொழிற்சங்க அமைப்புகள் ஏதோவொரு வகையில் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டிருக்கின்றன. தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் எச் சந்தர்ப்பத்தில் எதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பது இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு நன்கு தெரியும். இவ்விடயத்தில் எமக்கு அறிவுரை கூற யாரும் அவசியமில்லை. மலையக தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் பிரச்சினைகள் வேறு வட, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு என்பதை அனைவரும் உணரவேண்டும். வட, கிழக்கில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு இ.தொ.காங்கிரஸ் அலுவலகங்களை திறக்குமாறு அப்பகுதி மக்கள் எம்மிடம் விடுத்துவரும் கோரிக்கைகளைக் கூட எம்மால் நிவர்த்தி செய்ய முடியாதிருக்கின்றது. அப்பகுதிகளில் இ.தொ.காங்கிரஸ் அலுவலகங்களைத் திறக்கும்போது அங்குள்ள அரசியல்வாதிகளின் எதிர்ப்பினையும் நாம் சம்பாதிக்க வேண்டி ஏற்படும். அதனாலேயே அப்பகுதியிலுள்ள எமது மக்கள் விடுக்கும் கோரிக்கைகளையும் எம்மால் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
|