|
பயங்கரவாதத்தால் பிளவுபட்டிருந்த மனங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையுடன் இணையுமாறு ரஸ்யா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
[திங்கட்கிழமை,
08-02-2010, 22:30 GMT]
பயங்கரவாதத்தால் பிளவுபட்டிருந்த மனங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையுடன் இணையுமாறு ரஸ்யா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நாட்டினுள் மீண்டும் சமாதானம் மற்றும் அபிவிருத்தி என்பன ஏற்பட்டுவரும் நிலையில் ரஸ்யாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மொஸ்கோ மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் என்னும் லுமும்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ரஸ்ய இலக்கியமும், கலாச்சாரமும் சுமார் 50வருடங்களுக்கு முன்னர் இலங்கையுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்ததாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நிலைமையை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதன்மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்குமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவில் கருத்து வெளியிட்ட மொஸ்கோ மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பிலிபோச், உலக சமாதானத்திற்காக முன்மாதிரியான தலைமையை வழங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்தமை பெருமைக்குரிய விடயமென்று கூறியுள்ளார். ஜனாதிபதியின் வருகையைக் கௌரவிக்கும் வகையில் இலங்கைக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
|